Friday, 16 March 2012

#Gods #Rajini #Sachin.


Thursday, 15 March 2012

சிங்கள அரசின் தமிழின படுகொலை

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான 2வது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது சேனல் 4 நிறுவனம்.
இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இந்த வீடியோ ஆவணப் படத்தில் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டது, அப்பாவித் தமிழர்களை கொடூரமாக கொன்றது, புதுமாத்தளன் மருத்துவமனையை குண்டு வீசித் தகர்த்தது, போரற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்களைக் கொன்று குவித்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள், உணவு தராமல் கொடூரமாக சாக விட்டது உள்ளிட்ட பல்வேறு போர் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களை அடுக்கியுள்ளது சேனல் 4.

ஆவணப்படத்தின் இறுதியில், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச சமுதாயம் என்ன தீர்வு காணப்போகிறது, என்ன தண்டனை தரப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 



Wednesday, 14 March 2012

கே.ஆர். ஸ்ரீதர்


இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.


அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.



செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.
காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.


எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.



சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.
அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.
இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற
பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.


100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.






Sunday, 11 March 2012

என்னை கவர்ந்த பிரபலங்கள்.

என்னை கவர்ந்த பிரபலங்கள்
சச்சின் டெண்டுல்கர்,ரஜினி,ரஹ்மான் ஆகிய மூவரும் என்னை கவர்ந்த பிரபலங்கள் ஆவர்கள் ..
மூவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை நிறைய உள்ளது.
நேர்மை,அடக்கம்(உயர்ந்த இடத்தில் இருந்தாலும்) ,எளிமை என்று சொல்லி கொண்டே போகலாம்...


முதலில் ரஜினி பற்றி பார்போம்:
ரஜினி குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும். எந்த வித எதிர்பார்ப்புமில்லாத ஒரு ரசிகனால் மட்டுமே அப்படியெல்லாம் எழுத முடியும்.

இது ஒருபுறமிருக்க, ரஜினியை உள்ளுக்குள் பிடித்தாலும், படித்தவர்களாலும், உலக சினிமாக்களை அலசி ஆராய்ந்த மேதைகள் போல் நடிக்கும் மேதாவிகளின் கூட்டத்தாலும் கிண்டலடிக்கப்படுவோமோ எனப் பயந்து ரஜினியை பிடிக்காததுபோல வெளியில் காட்டிக்கொள்ளும் கூட்டம் ஒன்று உள்ளது.அக்கூட்டம் இக்கட்டுரையின் முடிவில் அழியுமென இல்லாமல் போகுமென நம்புவோம்..


க்ளின்ட் ஈஸ்ட்வுட்டை ரஜினி பின்பற்றவில்லை. இருந்தாலும் இருவரிடமும் ஒரே மாதிரியான தனித்தன்மை உண்டு. அதை வெளிக் கொணரும் நோக்கிலேயே இந்தக் கட்டுரை.
ரஜினியின் அரசியல் வாழ்க்கையையோ, அவரது ஆன்மீக வாழ்க்கையையோ நியாயப்படுத்த, ஏன் நான் தொடவே போவதில்லை. அவர் உயிராய் நேசிக்கும் அவரது திரையுலக வாழ்க்கையை அலசவே இதை எழுதுகிறேன். இந்தக் கட்டுரை ரஜினியின் தீவிர ரசிகர்களுக்காக மட்டுமல்ல.



ரஜினியை ஒரு கோமாளி என்றும், “பல நடிகர்கள் மிகவும் உழைத்து சம்பாரிக்கும் காசை, ஒன்றுமே செய்யாமல், உடல் அசையாமல் சம்பாரித்துவிட்டுப் போகிறார் ரஜினி”, போன்ற வசனங்களைச் சொல்லித் திரியும் ரஜினி வெறுப்பாளர்களுக்கும், சினிமாவின் சராசரி ரசிகர்களுக்கும்தான். மிகவும் முக்கியமாக, ரஜினியின் அரசியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை, போன்ற விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இதைப் படியுங்கள்.
இது ரஜினிக்கே மிகவும் பிடித்த ரஜினி என்ற நடிகரைப் பற்றியது மட்டுமே!!!


ஆசியாவில், அகில உலக நட்சத்திரம் ‘ஜாக்கி சானு’க்கு (Jackie Chan) அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குகிறார் ரஜினி, தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் சூப்பர் ஸ்டார். ஃபிரஞ்சு மொழிப் படத்தில் ஒரு காட்சியில் பின்ணணியில் ரஜினி படம் தொலைக்காட்சியில் ஓடுகிறது. ஜப்பானில் ரஜினிக்காக உயிரையும் கொடுக்கும் கூட்டம் ஒன்று உள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவோ அவரை சர்வதேச சூப்பர் ஸ்டார் என்கிறது.
குறிப்பிட்ட ஒரு மாநில மொழியில் மட்டுமே நடிக்கும் ரஜினி எப்படி இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? தமிழ்நாட்டின் சொத்தான ரஜினி மேல் பிரஞ்சுக்காரனுக்கும், ஜப்பான்காரனுக்கும் என்ன இவ்வளவு பாசம்?
ரஜினி ஆதரவாளர்கள் வழக்கமாக சொல்லும், “அவரு ரொம்ப சிம்பிள்…. தொழிலை தெய்வமாக மதிப்பவர்…”


போன்றவை அல்ல, இதற்குக் காரணங்கள்.
அவரை மக்களுக்கு பிடித்திருப்பதற்கு காரணம் அவருக்கு இயற்கையிலேயே, பிறப்பிலேயே அமைந்துவிட்ட தனித்தன்மையும், ஆங்கிலத்தில் Charm, Charisma எனப்படும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வசீகரமும் தான்.என்னதான் உயிரைக் கொடுத்து வெறியாய் நடித்தாலும் இதெல்லாம் வராது… ஏனெனில் இது இயற்கையாய் அமையப் பெறுவது. சிலபேருக்குதான் இது உண்டு. என்னதான் சில பூனைகள் வரிவரியாய் சூடு போட்டுக் கொண்டாலும், அவை புலி ஆகா!
ரஜினியைப் போன்ற நடிகர்கள் மொத்த அண்டத்திலேயே வெகுசிலர்தான். Clint Eastwood, Charlie Chaplin, Al Pacino மற்றும் இளைய தலைமுறையில் Johnny Depp.


இந்தியாவில், ஏன் ஆசியாவில் ரஜினிக்கு மட்டுமே அந்த சிறப்பு உண்டு.
Clint Eastwood தனது சமீபத்திய மிகப்பெரிய வெற்றிப் படமான ‘Gran Torino’ வரை தனது தோற்றத்தை மாற்றியோ, குரலை மாற்றியோ நடித்ததில்லை. தனது எழுபத்தெட்டாவது வயதில் கூட மிகப்பெரிய துப்பாக்கியைத் தூக்கி, வில்லன்களிடம், “I blow a hole in your face and then I go in the house… and I sleep like a baby. You can count on that.(உன் முகத்தில் சுட்டு உன்னைக் கொன்றுவிட்டு, ஒரு குழந்தையைப் போல என்னால் நிம்மதியாக தூங்க முடியும்!)” என பஞ்ச் டயலாக் பேசினாலும் திரையரங்கில் விசில் பறக்கிறது.

இந்த ஸ்டைல் உள்ள நடிகர்களை ஹாலிவுட்டிலும் மாஸ் ஹீரோக்களாகவே பயன்படுத்துகிறார்கள். இந்த நடிகர்களையெல்லாம் அழுகவிட்டும், வில்லனிடம் கெஞ்ச விட்டும் படமெடுத்தால் அங்கே யாரும் பார்க்க மாட்டார்கள். க்ளின்ட் ஈஸ்ட்வுட் காவல்துறை அதிகாரியாக, ரஜினியின் கொடி பறக்குது ‘சிவகிரி’ பாணியில் அதிரடியாக நடித்த திரைப்படம்தான் ‘Dirty Harry’. இதில் அவர் சொல்லும் “Go on… Make my day” போன்ற வசனங்களை, மிகப்பெரும் நடிகர் De Niro சொல்வதுபோல் கற்பனை செய்தால் கூட மகாகேவலமாக இருக்கும்.
அதேபோல் ரஜினியின், “ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” போன்ற வசனங்களை இந்தியாவில் வேறு யார் சொன்னாலும் பொருத்தமில்லாமல் தான் இருக்கும். ஆனால் ரஜினி அதை சொல்லும்போது அவரைப் பிடிக்காதவர்களுக்குக் கூடப் பிடிக்கும்.
ரஜினி, க்ளின்ட் ஈஸ்ட்வுட் போன்றோர் மிகப்பெரும் நடிகர்கள், நடிகர்கள் ஆகாமல் இருந்திருந்தால் கூட, அவர்களின் தனிப்பட்ட வட்டாரத்தில் அவர்கள் ஒரு ஹீரோக்களாகவே போற்றப்பட்டிருப்பர். அவர்களின் தோற்றம், பேச்சு, செயல் அப்படி. அதை யாராலும் மறுக்க முடியாது.
ரஜினியின் குறிப்பிட்ட சில படங்களே அவரின் திறமையின் ஒரு பகுதியை வெளிக்கொண்டு வந்த படங்கள். எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், தளபதி, மூன்று முடிச்சு, தில்லு முல்லு… இப்படி…
தளபதியில் மம்முட்டி சாகும் தருவாயில் எதிரிகளால் அடித்துப் 
போடப்படும் போது மருத்துவமனையில் அவரிடம் ரஜினி அரற்றும் காட்சி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.  ரஜினியை மட்டுமே முதலாய் வைத்து எடுக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் சிவாஜி. பலமான கதையே இல்லாமல், வெறும் ரஜினியால் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்த முடிகிறதெனில், நல்ல கதையோடு, ரஜினி என்ற திறமையும், கம்பீரமும் வாய்ந்த ஒரு மாபெரும் நடிகரை சரியாய் பயன்படுத்தி எடுக்கப்படும் படம் எப்படிப்பட்ட வெற்றி பெறும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.
ஒரு  டிவியின் விருது நிகழ்ச்சியில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டபோது, ரஜினியே, தான் ஷாரூக்கான் நடித்த ‘Chak de India’ திரைப்படம் போன்ற கதையுள்ள படங்களில் நடிக்க விரும்புவதாகத் பேசியது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.
ரஜினி என்ற, திரைப்படக் கல்லூரியில் இணைந்து படிக்கும் அளவுக்கு சினிமாவைக் காதலித்த அந்த நடிகனுக்குள் இருக்கும் சினிமா தாகத்தையும் ஏக்கத்தையும் உணர்த்தியது ரஜினியின் அந்தப் பேச்சு.


ரஜினி எப்போதுமே தனக்குள் இருக்கும் நடிகருக்கான சரியான தீனி வரும்போது பட்டினி போட்டதில்லை என்பதை  இயக்குனர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ரசிகர்கள் உலகத்தின் ஒரே சூப்பர் ஸ்டாரான அந்த மாபெரும் நடிகரிடம் நான் இன்னொரு பாட்ஷாவையும், இன்னொரு படையப்பாவையும் எவ்வளவு எதிர்பார்க்கிறேனோ, அதேபோல் இன்னொரு தில்லுமுல்லுவையோ, இன்னொரு முள்ளும் மலருமையோ எதிர்பார்க்கிறேன்.
இதுபோல் மாறுபட்ட இரண்டு வகைப் படங்களிலும் நடிக்க உலகத் திரைப்பட வரலாற்றில் ஒருவரால் மட்டுமே முடிந்தது… முடியும்!
அவர் ரஜினி… ரஜினி மட்டுமே!


"வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி!" - ஷாரூக் 
யார் நமக்கு என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மனதில் வைக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில் ரஜினிக்கு நிகரில்லை. 


திரையுலகில் தன்னை வசைபாடியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் அத்தனை பேருக்கும், ஆபத்தான நேரத்தில் கைகொடுத்தவர் இதே ரஜினிதான். அந்தப் பட்டியல் பெரியது.


ரஜினி ரோபோ என்ற பெயரில் படம் நடிக்க ஆரம்பித்தபோது, ஷாரூக்கான் அந்த 'ரோபோ' என்ற உச்சரிப்பில் வரும் ஏழு தலைப்புகளை மும்பையில் தன் பெயரில் பதிவு செய்தார். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் எப்படி ரோபோ எனும் தலைப்பில் வெளிவரப்போகிறது பார்க்கலாம் என்ற நினைப்பில்.


ஆனால் படம் இந்தியில் அதே பெயரில் வெளியானது வேறு விஷயம்.


இன்று அதே ஷாரூக்கானுக்காக தனது உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல், வீட்டில் எழுந்த எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு (சௌந்தர்யா தவிர வேறு யாரும் ரஜினியின் இந்தப் பயணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்!), மும்பைக்குப் பயணம் செய்து நடித்துக் கொடுத்து வந்திருக்கிறார் என்றால், அதை என்னவென்று சொல்வீர்கள்!


ரஜினியின் இந்த குணம், ஷாரூக்கானை ரொம்பவே ஆடிப் போக வைத்துவிட்டது.


இதுகுறித்து தனது ட்விட்டரில், "மிகுந்த குழப்பத்தில், புரிதலின்மையில், மன அழுத்தத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். அப்போது ரஜினி சார் செட்டுக்குள் வந்தார். கடவுள் எதற்காக சினிமா படைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். ரஜினி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் முழுமை பெற்றோம். அவரது பெருந்தன்மை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவருக்கும் குடும்பத்துக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்," என்று குறிப்பிட்டிருந்தார்.


அடுத்த நாள், ரஜினி நடித்துக் கொடுத்த காட்சியை தனது எடிட் ஸ்டுடியோவில் போட்டுப் பார்த்து பிரமித்துப் போனாராம் ஷாரூக்.


இதுகுறித்து அவர் கூறுகையில், ""சௌந்தர்யாவுடன் அமர்ந்து எடிட் செய்த ரஜினி சாரின் காட்சிகளைப் பார்த்தேன். ரஜினியின் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல தெரிகிறார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் விம்மியது... வாவ்! (Sitting with soundarya & seeing the edit of rajini sir's shoot.he is like a celestial being...the whole office is beaming with happiness.WOW) என்று குறிப்பிட்டுள்ளார்.


ரஜினி உங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து நடித்துக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்... எதிர்ப்பார்க்கவில்லை. காரணம், இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சார் என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன், மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி," என்றார்.



Sunday, 4 March 2012

அரவான்




இவ்வாண்டு எதிர்பார்த்த படங்களுள் ஒன்று.சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை மிக துல்லியமாக காட்டியுள்ள படம்தான் அரவான். 


பசுபதி களவாணி கிராமத்துல உள்ள ஒரு களவாணி.. அவர் அசலூர்ல போய் களவாண்டு வர்றதுதான் அந்த கிராமத்து மக்களுக்குப் படி அளக்குற அரிசி.. அவர் மதிப்பு மிக்க நகைகளை கொள்ளை அடிச்சு வந்தாலும்  ரொம்ப கம்மி விலைக்கு அதை எடுத்துக்கிட்டு பண்டமாற்றா கொஞ்சம் கேப்பை தர்றாங்க.. 


மகாராணியோட வைர நெக்லஸ் திருட்டு போயிடுது.. அதை கண்டு பிடிச்சுக்கொடுத்தா 6 மாசத்துக்கு உக்காந்து சாப்பிடற அளவு நெல் கிடைக்கும்னு சொல்றாங்க.. பசுபதி அதை தேடி போகையில் தான் ஹீரோ ஆதி சகவாசம் கிடைக்குது.. ஆதியும் ஒரு களவாணி தான்.. அவர் தான் அந்த நகையை களவாண்டவர்.. 


அந்த நகையை மகா ராணியிடம் ஒப்படைச்சு கிராம மக்களுக்கு நெல் வாங்கி தர்றாரு பசுபதி.. ஆதி பசுபதி கூடவே கூட்டு சேர்ந்துடறார்..
 இதற்கிடையில் ஆதியைப் பற்றி ஏகப்பட்ட கேள்விகள் எழுகிறது. பசுபதியின் தங்கை வேறு அவன் மேல் காதல் கொள்கிறாள். களவாடப் போகையில் பசுபதி மட்டும் மாட்டிக் கொண்டு விட அதிகாலையில் அவனை போய் காப்பாற்றிக் கொண்டு வருகிறான். அவர்களின் நட்பு இறுகுகிறது. பசுபதி மஞ்சுவிரட்டில் காயம்பட, அவனை காப்பாற்றும் பொருட்டு தான் யார் என்கிற உண்மையை போட்டுடைக்கிறான். ஆதி யார்? அவனுக்கு இந்த ஊருக்குமான உறவு என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விடை திரையில்.ஃபிளாஸ் பேக் கதை.




பசுபதியும், ஆதியும் சரியான தேர்வு. படம் முழுக்க அவர்களின் உழைப்பு பாராட்டத்தக்கது. 
வியந்து பாராட்ட வேண்டும் என்றால், இயக்குனருக்கு பின்பு ஒளிப்பதிவாளர் சித்தார்த்தைத்தான்..! காணாடுகாத்தான் வீடுகளின் பிரமாண்டத்தையும், காடு, மலை, அருவி என்று அவர் படம் பிடித்திருப்பவைகள் அவர்களின் கடுமையான உழைப்பைக் காட்டுகிறது..!முன்னூறு ஆண்டு பழமையான மக்களின் வாழ்விடங்களை, பழமை மாறாமல் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன் நம் கண்முன் நிறுத்துகிறார். ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனையாளர் என அனைத்து டெக்னீசியன்களும் இணைந்து ஒவ்வொரு பிரேமாக செதுக்கியிருக்கிறார்கள்.
கரிகாலனுடனான சண்டையின்போது எருமைக் கூட்டத்தைக் கூட்டி வந்து பசுபதியை மீட்டுச் செல்லும் ஆதியின் சண்டை கிராபிக்ஸில் சின்னாபின்னமாகிவிட்டது. கொஞ்சம் செம்மைப்படுத்தி செதுக்கியிருக்கலாம்.. பணமா இல்லை..? 


மைனஸ் -
படம் கிட்டத்தட்ட நத்தை வேகத்தில் நகர்கிறதே... கொஞ்சம் கத்தரி போடலாம் என்ற சிந்தனையே இல்லாமல் வேலைபார்த்திருக்கிறார்கள் படத்தின் எடிட்டர்கள்.
இதில் தேவையில்லாமல் வர்ற பாடல்கள் வேறு.
படத்தின் முக்கிய பலவீனம் இசை. கார்த்திக்கு  முதல் படத்திலேயே இத்தனை வலுவான குற்றசாட்டுகளை வைக்க தயக்கமாக இருந்தாலும்... உண்மை அதுதான்.
தாசியாக வரும் பெண் பாடும் பாடல் அக்மார்க் நகைக்கடை விளம்பர பீலிங்கை தருகிறது. 
ஆதி, பிடிபட்ட பின்பு இயேசுநாதரை போல் கொண்டு செல்லப்படுவதும், திருமாறனின் மனைவியும், மகனையும் அவ்விடத்தில் காட்டும் யுக்தியும் சுவாரசியமாகத்தான் இருந்தது. என்றாலும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஒரு குறையே..! 
ஒரு களவுக் கூட்டத்தின் நடைமுறையான நரபலியே பின்னர் மரண தண்டனையானதாகவும், அதை பின்னர் பிரிட்டிஷார் ஒழித்ததாகவும், அப்படியும் இன்னும் 83 நாடுகளில் மரணதண்டனை நீடிக்கிறதே என்ற ஆதங்க நீட்சியாகவும் இந்தப் படம் முடிகிறது. இயக்குநர் இரண்டரை மணிநேரம் சொன்ன களவுக் கதைக்கும், இந்த கடைசி நிமிடத்து டைட்டில் மெஸேஜுக்குமான தொடர்பைக் கண்டுபிடிக்க தனி வரலாற்றுப் படமெடுப்பார்கள் போலிருக்கிறது!
அரவான் சரி ஓகே.. அவ்வளவுதான் ..

Friday, 2 March 2012

கமலஹாசன்

வாங்கிய விருதுகள்:

கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.

ரோபோ படத்தை கமல் நடிக்கும் போது எடுத்த படங்கள் 








Thursday, 1 March 2012

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!



அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.





இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.




இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்தபடி பெற்று அதில் இந்த சோலார் பேனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.


நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப் படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.




இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:


இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். 




இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும். 


தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?


நன்றி
http://www.tamilcatholican.com
Related Posts Plugin for WordPress, Blogger...