Tuesday, 24 April 2012

தம்பீ.. கொஞ்சம் நில்லு

 தம்பீ.. கொஞ்சம் நில்லு மணி ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது. பஸ்சை விட்டு இறங்கி பரபரப்பாக ஆபீசுக்கு ஓடிக் கொண்டிருந்தான் துரை. ‘‘தம்பீ.. கொஞ்சம் நில்லு’’ பின்னால் இருந்து குரல் கேட்டது.
இந்த நேரத்தில் யார் கூப்பிடுவது?’ திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. ‘மன பிராந்தியோ..’ தொடர்ந்து நடக்க ஆரம்பித்தவனை மீண்டும் நிறுத்தியது குரல். ‘‘அப்படியே நில்லு. இன்னும் ஒரு அடி எடுத்து வச்சா ஆபத்து. உனக்கு வலது பக்கத்துல அபார்ட்மென்ட் கட்டிக்கிட்டு இருக்காங்க பாரு. அதோட 9-வது தளத்துல இருந்து ஒரு செங்கல் கீழே விழப்போகுது. நடந்தா, உன் தலையில விழுந்து உயிருக்கே ஆபத்து ஆகிடும்’’ என்று மிரட்டியது குரல். வலது பக்கம் திரும்பினான். குரல் சொன்னது போலவே ஒரு அபார்ட்மென்ட். கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. ‘கண்டிப்பா இது மன பிராந்தியும் இல்ல.. மன விஸ்கியும் இல்ல’ என்ற முடிவுக்கு வந்த துரை அடுத்த அடி எடுத்து வைக்காமல் அங்கேயே நின்றான். அடுத்த கணம்.. குரல் சொன்னது போலவே 9-வது மாடியில் இருந்து விழுந்த செங்கல் ஒரு அடி முன்னால் அவன் கண் எதிரே விழுந்தது. இவன் அடியெடுத்து வைத்திருந்தால்.. குரல் சொன்னதுபோல மண்டை உடைந்து ரத்தக் களறி ஆகியிருக்கும். துரைக்கு பக்கென்று இருந்தது.


 கழுதையாய் கத்தும் மேனேஜர் முகம் நினைவுக்கு வர.. நடையை வேகமாக்கினான். ஐந்து நிமிடம் ஆகியிருக்கும்.. சாலையை கடந்தால் ஆபீஸ். பிளாட்பாரத்தில் இருந்து தார் சாலைக்கு அடியெடுத்து வைத்தான். ‘‘தம்பீ! அப்படியே நில்லு’’ அதே குரல். ‘‘இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், நேரே இருந்து வரும் சிவப்பு கலர் மாருதி கார் சிக்னலில் ரைட் எடுத்து உன் மீது மோதிவிடும்’’ என்றது குரல். சிக்னலை பார்த்தான். பச்சை போட்டிருந்தது. குரல் சொன்ன திசையில் இருந்து வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. சிவப்பு கலர் மாருதி கார் இவனை உரசுவதுபோல வந்து கடந்து சென்றது. துரைக்கு வியர்த்துக் கொட்டியது. நடந்து சென்றிருந்தால், இத்தனை நேரம் 108 வண்டி அங்கு வந்திருக்கும். நினைத்துப் பார்க்கவே பகீர் என்றது. நிதானமாக சாலையை கடந்து சென்றவன் ஒரு மரத்துக்கு கீழே ரிலாக்சாக நின்றான். ‘‘ஏ குரலே! யார் நீ?’’ ‘‘ஹாஹ்ஹா..’’ என்ற சிரிப்புடன் ஓபனிங் கொடுத்தது குரல்.. ‘‘நான்தான் உன் உயிர் காக்கும் தேவதை. எப்போதும் உன்கூடவே வந்துகொண்டிருப்பேன்’’ என்றது. ‘‘இரண்டு முறை காப்பாற்றி இருக்கிறாய். எதிரில் வர முடியுமா?’’ என்றான் துரை.


 ‘‘தேவகுலத்தை சேர்ந்தவர்கள் அப்படியெல்லாம் வரப்படாது’’ என்றது தேவதை. ஆனாலும் அடம்பிடித்தான் துரை. உயிரை காப்பாற்றியதற்கு நன்றி சொல்லத்தானே கூப்பிடுகிறான். நன்றியை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து தொபுக்கடீர் என்று அவன் முன்னால் குதித்தது உருவம்.


 கொஞ்சமும் தாமதிக்காமல் அதன் குரல்வளையை பிடித்தான் துரை. தேவதை அப்படியே ஷாக் ஆகிடிச்சு. ‘‘செங்கல் விழப்போகுது.. கார் மோதப் போகுதுன்னு கரெக்டா சொன்ன. ஓகே. நான் கல்யாணம் பண்ணும்போது எங்கே போய்த் தொலைஞ்ச முண்டமே..’’ என்று கேட்டபடியே வெளுக்க ஆரம்பித்தான். அடி தாங்க முடியாமல் துண்டை காணோம்.. துணியை காணோம் என்று பறந்தோடியது உருவம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...