Saturday, 10 September 2011

The Terminal (2004)




க்ரகோஷியா அப்படின்னு ஒரு நாடு.. (உண்மையில அப்படி ஒரு நாடு கிடையாது.. கற்பனைதான்..) அங்க இருந்து ஹீரோ விக்டர் நவோர்ஸ்கி (டாம் ஹேங்க்ஸ்) அமெரிக்காவுக்கு வர்றாரு.. ஏர்போர்ட்ல கம்ப்யூட்டர் அவரோட பாஸ்போர்ட் சொல்லாதுன்னு காட்டுது.. அப்பறம் பிரச்சினை என்னான்னு பார்த்துட்டு, அவரை ஏர்போர்ட் மேலதிகாரி Dixon கிட்ட கூட்டிட்டு போறாங்க.. Dixon திறமையானவர்.. ஆனா ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்.. ரூல்ஸ் ராமானுஜம்.. இதோ கீழே ஃபோட்டோல முறைச்சுகிட்டு இருக்காரே அவருதான்..




அவர்தான் நம்ம ஹீரோகிட்ட அவங்க நாட்டுல ஏற்பட்டு இருக்கற கலவரம் பத்தி சொல்லறாரு.. கலவரம் முடியற வரைக்கும் இங்கதான் இருக்கணும்னு சொல்லறாரு.. எல்லாம் பேசி முடிச்சப்பறம்தான் தெரியுது.. ஹீரோவுக்கு இங்க்லீஷ் தெரியாதுன்னு.. ரஜினி படிக்காதவன் படத்துல சொல்லுவாரே.. அது மாதிரி எது கேட்டாலும் Yes தான் ஒரே பதில்.. இங்க்லீஷ் தெரியாதவனோட எல்லாம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கேன்னு ஆபீஸர் கொஞ்சம் கடுப்பாயிடறார்..
ஹீரோவுக்கு சாப்பாடு கூப்பனும், வீட்டுக்கு ஃபோன் பேச காலிங் கார்டும் குடுத்து ஏர்போர்ட்-லேயே சுத்திட்டு இருன்னு சொல்லி அனுப்பிடறாங்க..


அப்போதான் ஹீரோ அங்க இருக்கற TV-ல பார்த்து, தன் நாட்டுல ஏதோ கலவரம்னு தெரிஞ்சுக்கறார்.. ஆனா அதுவும் இங்க்லீஷ்ல சொல்லறாங்க.. ஒண்ணும் புரியல அவருக்கு.. அழறாரு.. வீட்டுக்கு ஃபோன் பண்ணறது எப்படின்னு தெரியல.. எல்லாரும் பரபரப்பா போயிட்டே இருக்காங்க.. யாரும் உதவி பண்ண வரல..


ஹீரோ ரொம்ப அப்பாவி.. அடுத்தவங்களுக்கு உதவி பண்ணப் போய் அது பிரச்சினையில முடியுது.. ஏர்போர்ட்ல கையில வாளியோட குளிக்கப் போற அவரைப் பத்தி பலர் புகார் செய்யறாங்க.. அதுவே ஆபீஸர் Dixon-க்கு தலைவலியா இருக்கு.. ஹீரோ ஏர்போர்ட்ல இருந்து வெளியே போயிட்டா, போலீஸ் அவரை பிடிச்சுடுவாங்க.. Dixon-க்கு பிரச்சினையில்லை.. அதுனால ஹீரோ தப்பிக்க Dixon-னே வ்ழி சொல்லறாரு.. ஆனா ஹீரோ போகலை.. காத்திருக்கிறேன்னு சொல்லறாரு.. இதுல Dixon இன்னும் பேஜாராயிடறாரு..


ஸ்பீல்பெர்க் படம்னா சுவாரஸ்யத்துக்கா பஞ்சம்.. சாப்பாட்டு கூப்பனை தொலைச்சிட்டு, காசுக்காக ஹீரோ பண்ணற வழிகளும், அவர் காசு சம்பாதிக்கறதை தடுக்க Dixon பண்ணற வழிகளும், இங்க்லீஷ் தெரியாம ஹீரோ பேச முயற்சிக்கறதும், ஹீரோவை CIA என பலர் சந்தேகப்படுறதும்.. படம் முழுக்க சுவாரஸ்யம்..


பல வித்தியாசமான கதாபாத்திரங்கள்.. செக்-இன் செய்யும் இடத்தில் இருக்கும் பெண் ஆபீஸர், அந்தப்பெண்ணை ஒருதலையாக காதலிக்கும் சமையல்கார இளைஞன், அவனுக்கு உதவி செய்ய தினமும் அந்த பெண்ணிடம் பேச க்யூவில் நிற்கும் ஹீரோ, தரை துடைப்பவராக இருக்கும் தாத்தா, அவருக்கு சென்னையில்(!) ஒரு முப்பது வருட பழமையான பின்னணி.. இப்படி நீள்கிறது பட்டியல்..


Dixon ஹீரோவுக்கு எதிராக அவ்வளவு சதி செய்தும், ஹீரோ எப்படியாவது சாப்பாட்டுக்கு வழி செய்து, கொஞ்சம் கொஞ்சமாக இங்க்லீஷ் கத்துகிட்டு, சில மாதங்களில் ஏர்போர்ட்டில் எல்லோர்கிட்டேயும் நண்பராகி விடுகிறார்.. Dixon-ஐத் தவிர..


ஒருநாள் கனடாவில் இருந்து அமெரிக்கா வழியாக ரஷ்யா போற ஒருத்தன் வைத்திருக்கும் மருந்தை கஸ்டம்ஸில் பிடித்து விடுகிறார்கள்.. காரணம் விமானத்தில கொண்டுபோற எல்லா மருந்துகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கணும்.. கனடாவிலும் ரஷ்யாவிலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தும், அமெரிக்காவில் அது அங்கீகரிக்கப்படவில்லை.. அமெரிக்கா வழியாக போகிறான் என்ற ஒரே காரணத்துக்காக ரூல்ஸ் பேசி அந்த மருந்தை பிடுங்கிடறாங்க Dixon-னும், அவரோட ஆட்களும்.. ஆனால், ஹீரோ ரஷ்ய மொழியில் அவன்கிட்ட பேசி, அது ஆட்டுக்கான மருந்துன்னு சொல்ல சொல்லி, மருந்தை வாங்கி கொடுக்கிறார்.. (ஆட்டு மருந்துக்கு எல்லாம் செக்கிங் கிடையாதாம்..) தான் குற்றம் சாட்டிய ஒருத்தனுக்கு, ஹீரோ உதவி செஞ்சதால எரிச்சலடையறாரு Dixon..


ஹீரோவை அடிக்கிறார் Dixon.. அப்போ ஹீரோ அங்க இருக்கற Xerox இயந்திரத்தின் மேல கைவைக்க, அவரோட கைரேகை Xerox நகல்களாக வந்துகிட்டே இருக்கு.. அடுத்த நாள் காலை, Dixon-க்கு எதிரா தைரியமா செயல்பட்ட ஹீரோவைப் பாராட்ட அவரோட கைரேகை நகலை ஏர்போர்ட்ல இருக்கற எல்லா கடைக்காரர்களும் கடையில் மாட்டி வச்சுருக்காங்க..


எல்லாருக்கும் நண்பரா இருந்தாலும், ஹீரோ எதுக்காக அமெரிக்கா வந்திருக்கார்னு யாருக்குமே தெரியல.. அவர் பையில எப்போதுமே ஒரு தகர டப்பா வச்சுருக்காரு.. அதுல என்ன இருக்கு, அவர் ஏன் வந்திருக்காருன்னு Dixon–க்கு சந்தேகம்.. அதை தெரிஞ்சுக்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் முடியல..






இதற்கிடையில, அடிக்கடி ஏர்போர்ட் வரும் ஒரு அழகான பெண் பயணியிடம் காதலில் விழறார் ஹீரோ.. இவனைப்போயி ஒரு அழகான பொண்ணு காதலிக்கிறாளான்னு ஆச்சரியப்படற Dixon, அவளிடம் விசாரிக்கிறாரு.. அப்ப வர்ற டயலாக் முக்கியமானது..


எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும், உதவி பண்ண மனசில்லாத Dixon-ஐ விட ஹீரோ எவ்வளவோ நல்லவர்னு படம் முழுக்க காட்டறாங்க.. ரூல்ஸ் முக்கியமில்ல.. மனிதர்கள்தான் முக்கியம்னு புரியவைக்கறாங்க..


பொதுவா ஹாலிவுட் படங்கள்ல அமெரிக்காதான் உலகமே.. அமெரிக்கர்கள் எல்லாம் புண்ணியவான்கள்னு காட்டுவாங்க.. ஆனா, ஸ்பீல்பெர்க் ரொம்பவே நியாயமானவர்.. அவரோட பல படங்கள்ல ஹீரோ வெளிநாட்டுக்காரர்தான்.. அதுவும் இந்தப்படத்துல ஐரோப்பாவை சேர்ந்த ஹீரோ, கருப்பின பெண் ஆபீஸ்ர், ஃப்ரான்ஸை சேர்ந்த சமையல் பையன், இந்தியாவை சேர்ந்த தாத்தா என எல்லோரும் நல்லவர்கள்.. பிஸியான அமெரிக்கர்களிடம் உதவி மனப்பான்மை இல்லாததை காட்டியிருக்காங்க..


டாம் ஹேங்க்ஸ் நல்லா நடிச்சுருக்காருன்னு சொன்னா அது understatement. ஒவ்வொரு காட்சியிலயும் அவர் காட்டற அப்பாவித்தனமும், படம் முழுக்க கொஞ்சம் காலை வீசி வீசி நடக்கும் கோமாளி நடையும், ஆங்கிலம் தெரியாமல் தவிப்பதும்.. ரசிச்சுட்டே இருக்கலாம்..


ஹீரோ எதுக்காக அமெரிக்கா வந்திருக்காரு? அந்த தகர டப்பாவில என்ன இருக்கு? அவரு ஏர்போர்ட்டை விட்டு போனாரா இல்லையா? அவரோட காதல் என்ன ஆச்சு? அதெல்லாம் படத்துல பாருங்க.. பெருசா தத்துவம் சொல்லற படம் இல்ல இது.. ஆனா, ரெண்டு மணி நேரம் சுவாரஸ்யத்துக்கும், விறுவிறுப்புக்கும், காமெடிக்கும் குறைவே இருக்காது..

Psycho (1960)


      
1960 ல் பிரபல இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்-கின் இயக்கத்தில் வெளிவந்த படம்… சைக்கோ.
அரிசோனா மாகாணத்தில் ஃபோனிக்ஸ் நகரின்மீது ஆரம்பிக்கிறது படம். அதிகாலை விடியலைப் போல், பூவின் மலர்தலைப் போல அமைதியாக ஆரம்பிக்கும் இந்தப் படம் முடிவில் உங்களுக்குள் தரும் அதிர்வலைகளை நீங்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.


ஒரு வெள்ளிக்கிழைமையின் மதிய உணவு இடைவேளையில் காதலன் சாமை ஒரு ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள் காதலி மரியான் (JANET LEIGH). திருமணத்தைத் தள்ளிப்போடும் காதலனுடனான சிறுவிவாதத்திற்குப் பிறகு அவள் தனது அலுவலகத்திற்குப் போகிறாள்.


புதியதாக ஒரு சொத்து வாங்க 40000 டாலர்களை மொத்தமாக ஒரு செல்வந்தர் கொடுக்க.. அதை வாங்கியவள் ‘வங்கியில் அதை டெபாசிட் செய்திவிட்டு அப்படியே வீட்டுக்குப் போகிறேன்’ என்று பாஸிடம் அனுமதி பெற்றுச் செல்கிறாள். அங்கேதான் படமும், அவள் வாழ்க்கையும் திசை மாறுகிறது.


ஏதோ ஒரு முடிவுடன் தனது அறைக்குச் சென்று ஆடைகளை ஒரு சூட்கேஸில் பேக் செய்து காரில் கிளம்புகிறாள் அவள். ஊரைவிட்டு வேறொரு ஊருக்கு வந்து, காரை விற்று வேறு கார் மாற்றி… நார்மென் பேட்ஸ் (ANTONY PERKINS) என்பவருக்குச் சொந்தமான ஒரு விடுதியில் தங்குகிறாள். 12 அறைகளைக் கொண்ட அந்த விடுதியில் யாருமில்லை.


அந்த இரவில் உணவு கிடைப்பது அரிதென, நார்மென் பேட்ஸ் அவரது வீட்டில் டின்னருக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிச் செல்கிறார். அங்கே நார்மென் பேட்ஸுக்கும் அவரது தாயாருக்கும் வாக்குவாதம் நடப்பதை கேட்கிறாள் மரியான். சற்று நேரத்தில் நார்மென் பேட்ஸ் விடுதிக்கே உணவைக் கொண்டுவந்து கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.


அதன் பிறகு குளிக்கச் செல்கிறாள் மரியான் . அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது. திடீரென வந்த யாராலோ குரூரமாகக் குத்திக் கொலை செய்யப் படுகிறாள்.


கடைசியாக இதற்கெல்லாம் என்ன காரணம் என அறிய சாம், லைலா இருவரும் செல்கின்றனர். பேட்ஸின் விடுதியில் அறை எடுத்துத் தங்கி.. பேட்ஸிடம் சாம் பேச்சுக் கொடுத்த வண்ணம் இருக்க.. பேட்ஸின் வீட்டிற்கு சென்று அந்த வயதான தாயாரைப் பார்க்க லைலா போகிறாள்..


அங்கே....


வயதான தாயென்று யாருமே இல்லை.


அப்படியானால் கொலை செய்ததெல்லாம்...?


அந்த வயதான தாய்தான். எப்படி?


படம் பாருங்கள்!

Children of Heaven (1997)






உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம் அண்ணன் த‌ங்கையான ஒரு சிறுவனையும், ஒரு சிறுமியையும் பற்றியது.
அலி எனும் சிறுவன் தனது த‌ங்கையின் கிழிந்த ஷுக்களை தைத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறான். வீடு செல்லும் வழியில் கடைக்கு செல்கிறான் அலி. உருளைக்கிழ‌ங்கு வா‌ங்கும்போது, கடையிலிருக்கும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் பைகளுக்கு அருகே ஷுவை வைக்கிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக அலி வைத்திருக்கும் ஷுவையும் எடுத்துச் செல்கிறான்.
ஷு தொலைந்துபோன விவரத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என த‌ங்கை ‌ஜாராவிடம் கூறுகிறான் அலி. காரணம், அந்த குடும்பத்தின் வறுமை. ஜாராவின் தந்தையோ நிரந்தர வேலையில்லாதவர். ஐந்து மாதம் வாடகை பாக்கி வைத்திருப்பவர்.


அண்ணனும், த‌ங்கையும் இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். ஜாரா அலியின் ஷு வை அணிந்து காலையில் பள்ளிக்கு செல்ல வேண்டும். அலிக்கு மதியத்திற்குப் பிறகுதான் வகுப்பு. ஜாரா வந்த பிறகு அவளிடமிருந்து ஷு வை வா‌ங்கி அணிந்து சென்றால் ஷு தொலைந்ததை தந்தையின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அவரது கோபத்திலிருந்து தப்பிக்கலாம்.


அண்ணனின் பெ‌ரிய காலணியை அணிந்து பள்ளி செல்கிறாள் ஜாரா.  மேலும் ஒவ்வெரு நாளும் பள்ளி முடிந்ததும் அண்ணனிடம் ஷுவை கொடுப்பதற்கு குறுகலான தெருக்கள் வழி அவள் ஓட வேண்டியிருக்கிறது. அப்படியும் வகுப்பு தொட‌ங்கிய பிறகே ஒவ்வொரு நாளும் அலியால் பள்ளி செல்ல முடிகிறது. தலைமையாசி‌ரியரால் எச்ச‌ரிக்கப்படும் அலி, ஒருமுறை வீட்டிலிருந்து யாரையேனும் அழைத்து வரும்படி பணிக்கப்படுகிறான். வகுப்பாசி‌ரிய‌ரின் ப‌ரிந்துரையால் அந்த முறையும் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான் அலி.


இதனிடையில் தொலைந்து போன தனது ஷுவை தனது பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்திருப்பதை ஜாரா கண்டுபிடிக்கிறாள். தனது அண்ணனுடன் அந்த சிறுமியை பின்தொடர்கிறாள். இருவரும் அந்த சிறுமியின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அந்த சிறுமியின் தந்தை கண் தெ‌ரியாதவர் என்பது தெ‌ரிந்ததும் அண்ணனும் த‌ங்கையும் ஏதும் பேசாமல் மவுனமாக வீடு திரும்புகிறார்கள்.


இந்நிலையில் அலியின் பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான தேர்வு நடக்கிறது. அதில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் அலி, பந்தயத்தில் 3வதாக வருகிறவர்களுக்கு ப‌ரிசு ஒரு ஜோடி ஷு என்பது தெ‌ரிய வந்ததும் ஆசி‌ரிய‌ரிடம் மன்றாடி தானும் போட்டியில் கலந்து கொள்கிறான். போட்டியில் எப்படியும் 3 வதாக வந்துவிடுவதாக கூறும் அலி, தனக்கு கிடைக்கும் ஷுவை கடையில் கொடுத்து அதற்குப் பதில் ஜாராவுக்கு ஒரு ஜதை ஷு வா‌ங்கித் தருவதாக வாக்களிக்‌கிறான்.
பந்தயத்திற்கான நாளும் வருகிறது. அலி ஓடும் போது பின்னணியில் ஜாரா அலிக்கு ஷுவை கொடுக்க ஓடிவரும் சத்தமும், ஷு தொடர்பான அவர்களது உரையாடலும் ஒலிக்கிறது. இறுதியில் போட்டியில் 3 வதாக வருவதற்குப் பதில் முதலாவதாக வருகிறான் அலி. தன்னை பரவசத்துடன் தூக்கும் ஆசி‌ரிய‌ரிடம் நான் 3வதாகத்தானே வந்தேன் என்று கேட்கிறான்;. மூ‌ன்றாவதா..? முதல்ப‌ரிசே உனக்கு‌த்தான் என்கிறார் ஆ‌சி‌ரியர். அந்த சிறுவனின் முகம் வாடிப் போகிறது.


வீட்டிற்கு வருகிறான் அலி. தண்ணீர் தொட்டி அருகே நிற்கும் ஜாரா அண்ணனின் தொ‌ங்கிய முகத்தை பார்க்கிறாள். அவளது முகமும் வாடி விடுகிறது. வீட்டிலிருந்து அவளது சின்ன த‌ங்கையின் அழுகுரல் ; கேட்க, அவள் உள்ளே செல்கிறாள். 


அலியின் ஷு இப்போது நைந்து கிழிந்து போயிருக்கிறது.தொட்டியின் அருகே அமர்ந்து அவற்றை கழற்றுகிறான். ஓட்டப் பந்தயம் அவன் கால்களில் பல இட‌ங்களில் காய‌ங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வலியும் ஏமாற்றமும் ஒரு சேர தனது கால்களை தொட்டியில் விடுகிறான் அலி. நீருக்குள் இருக்கும் அவனது கால்களை த‌ங்க நிற மீன்கள் சுற்றி முத்தமிடுவதுடன் படம் நிறைவடைகிறது.







சிறுகதைக்கு‌ரிய கச்சிதத்தையும், கவிதைக்கு‌ரிய கவித்துவத்தையும் ம‌ஜித் ம‌ஜிதியின் இப்படம் ஒருசேர கொண்டிருப்பது இதன் சிறப்பு என கூறலாம்.


குழந்தைகளின்பால் கருணை பெருக்கெடுக்க சராச‌ரியான இயக்குனர்கள் கையாளும் எந்த யுக்தியையும் ம‌ஜித் ம‌ஜிதி கையாளவில்லை. படத்தில் யாரும் குழந்தைகளை இம்சிப்பதில்லை, கொடுமைப்படுத்துவதில்லை. மாறாக உதவி செய்கிறார்கள், நேசிக்கிறார்கள். இருந்தும் அந்த குழந்தைகளின் மீதான துயரம் பனியாக நம்மீது படர்கிறது. குழந்தைகளின் க‌ள‌ங்கமின்மை, அன்பின் வெளிப்பாடுகள், மனித நேயம் ஆகியவை சில்ட்ரன் ஆஃப் ஹெவனை எல்லோருக்குமான திரைப்படமாக மாற்றுகிறது.


குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக அதே நேரம் தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலை அமைதி கெடாமல் சொல்கிறது ம‌ஜித் ம‌ஜிதின் இப்படம். அதனால்தான், அலி, ஜாராவை சந்திக்கும் இறுதி காட்சிக்கு முன், அவர்களின் தந்தை இருவருக்கும் ஷு வா‌ங்கும் காட்சி காட்டப்பட்ட பின்பும் பார்வையாளர்கள் பதட்டம் குறையாமல் அந்த குழந்தைகளின் துயரத்தில் ப‌ங்கெடுக்கிறார்கள்.


உறுதியாக, நிச்சயமாக சொல்லலாம்... குழந்தைகளைப் பற்றி வந்த சிறந்த திரைப்பட‌ங்களில் சில்ட்ரன் ஆஃப் ஹெவனும் ஒன்று.

The Guns of Navarone (1961)


                           
                          துருக்கிக்கு பக்கத்துல ஏஜியன் கடல்ல இருக்கற கெரோஸ் தீவுகள்ல ஒரு 2000 பேர் கொண்ட ப்ரிட்டிஷ் துருப்பு இருக்கு. அவங்கள வெளிய கொண்டு வரலாம்னா, பக்கத்துல இருக்கற நவரோன் தீவுல (கிரீஸ்) ஜெர்மனி ரெண்டு பெரிய கப்பலை தாக்கற பீரங்கிகள் வெச்சுருக்காங்க. அதுகளை மீறி கடலைக் கடக்கறது ரொம்ப கஷ்டம். வான் வழியா போற முயற்சிகளும் தோல்வி அடைஞ்சதுனால அவசரமா ஒரு 6 பேர் கொண்ட குழு அமைக்கிறாங்க. அவங்க வேலை எப்படியாவது நவரோன் தீவுக்கு போய் அந்த பீரங்கிகளை தகர்க்கணும். சரியா 6 நாள் தவணை. போறதுக்கு ஒரே வழி அவ்வளவா செக்யூரிடி இல்லாத செக்குத்தான நவரோன் cliff ல ஏறி போறதுதான்.


மேஜர் ஃப்ரான்க்லின், கேப்டன் மல்லாரி (க்ரெகொரி பெக்), கார்பொரல் மில்லர் (டேவிட் நெவின்), கர்னல் ஆண்ட்ரியா (ஆண்டனி க்வின்) இன்னும் ரெண்டு பேர் குழுவுல. மில்லர் ஒரு வெடிமருந்து நிபுணர். ஆண்ட்ரியா ஒரு கிரேக்க கர்னல். எல்லாருக்குமே ஓரளவுக்கு கிரெக்க மொழி பேசத் தெரியும். எல்லாம் மீனவர்கள் மாதிரி ஒரு காயலங்கடை படகுல போறாங்க. வழில ஜெர்மன் coast guards வந்து விசாரிக்கும்போது அவங்களை சுட்டுக் கொன்னுட்டு அவங்க பேட்ரோல் போட்டையும் அழிச்சுடறாங்க. கிட்டத்தட்ட மலை அடிவார-த்துக்குப் போய் சேரும்போது புயல்ல சிக்கி இருக்கற ஓட்டை போட்டும் உடைஞ்சு போய் மருந்து, உணவுப் பொருட்கள் எல்லாம் காலி.


முதல்ல மல்லாரி cliffல ஏறி கயிறு கட்டினதும் ஒவ்வொருத்தரா மேல வராங்க. கடைசியா மேஜர் ஃப்ரான்க்லின் ஏறும்போது மழை அதிகமாகி வழுக்கி விழுந்து கால்ல அடி. நடக்க முடியாது. அவரை தூக்கிக்கிட்டே மேல நடக்கறாங்க. அங்கியே விட்டுட்டுப் போனா கண்டிப்பா ஜெர்மன் வீரார்கள் கிட்ட சிக்கிடுவாரு. அப்பறம் அவங்க தர டார்ச்சர்ல இவங்க ப்ளானை சொன்னாலும் சொல்லிடுவாருன்னு, எப்பிடியாவது மண்ட்ராகோஸ் போயிட்டா அவருக்கு சிகிச்சை குடுத்துடலாம்னு திட்டம் போடறாங்க. இப்ப கூட இன்னும் ரெண்டு உள்ளூர் புரட்சிப் பெண்களும் வந்து குழுவுல சேரறாங்க. மண்ட்ராகோஸ் போய் ஒரு சர்சுல தங்கறாங்க. ஆண்ட்ரியா ஃப்ரான்லினை ஒரு டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போகும்போது விசஹயம் தெரிஞ்சு அங்க வர ஜெர்மன் வீரர்க கிட்ட மாட்டிக்கறாங்க. மத்த 4 பேரும் ஊருக்குள்ள நடக்கற ஒரு விழாக்கூட்டத்துல போய் மறைஞ்சாலும், அங்கியும் ஜெர்மன் வீரர்கள் வந்து எல்லாரையும் புடிச்சிடறாங்க. இப்ப 6 பேரும் விசாரணைல. திடீர்னு ஆண்ட்ரியா தான் ஒரு ஏழை மீனவன்னும், தன் படகை அபகரிச்சுட்டு அவனையும் ஒரு கைதி ஆக்கிட்டாங்கன்னு நாடகம் போட்டு எல்லாத்தையும் திசை திருப்பி ஒரு திடீர் தாக்குதல் நடத்தி எல்லாரும் ஜெர்மன் ராணுவ உடுப்புகளைப் போட்டுக்கிட்டு ராணுவ லாரில தப்பிச்சுடறாங்க. ஃப்ரான்க்லினை (அவருக்கு காயம் கெட்டுப் போய் gaangrene டெவலப் ஆயிடுது) அங்கியே விட்டுட்டு போயிடறாங்க.


இப்ப மில்லர் வந்து வெடிமருந்துகள், டெடொனேட்டர்கள் எல்லாம் சேதமடைஞ்சுருக்கறதா சொல்றாரு. “ப்ளான் எப்பிடியோ ஜெர்மனிக்கு லீக் ஆகுது, இல்லேன்னா அவங்க எப்பிடி மோப்பம் புடிச்சுருப்பாங்க, நம்ம கூட்டதுல ஒரு கருப்பு ஆடு இருக்கு. சம்பவங்களைக் கோர்த்துப் பாத்தா கடைசியா வந்து சேந்த பெண்கள்ல ஒருத்தியான ‘ஏனா’ தான் ஒற்று வேலை பாத்திருக்கா. உடனடியா அவளை தீர்த்துக் கட்டணும்”. அவளும் ஜெர்மனியோட டார்ச்சர் தாங்காம அவங்களுக்காக ஏஜண்ட் வேலை பாத்ததா ஒப்புக்கறா. அங்கியே அவளை மரியா சுட்டுக் கொன்னுடறா. பிறகு மரியாவும், ஸ்பைரோசும் ஒரு ஸ்பீட் போட் ஏற்பாடு பண்ணணும்னும், ஆண்ட்ரியாவும் ப்ரௌனும் பீரங்கி இருக்கற இடத்துக்கு வெளிய ஒரு சின்ன கலவரம் உண்டாக்கி ஜெர்மனிய திசை திருப்பணும்னும் ப்ளான் பண்ணிட்டு, மல்லாரியும் மில்லரும் கிளம்பி நவரோன் பீரங்கி இருக்கற இடத்துக்கு போறாங்க. அங்க அடிபட்டு இருக்கற ஃப்ராங்லினுக்கு (மல்லாரி எதிர்பார்த்தமாதிரியே) மயக்க மருந்து குடுத்து உண்மையை வரவழைக்க முயற்சிக்க அவரோ வேணும்னே தப்பான தகவல் குடுத்து அவங்களை திருப்பி விட்டுடறாரு.


மல்லாரியும் மில்லரும் சில தில்லுமுல்லுகளுக்குப் பிறகு பீரங்கி அறைக்குள்ள நுழைஞ்சு கதவை உள்ள இருந்து சாத்திடறாங்க. கதவை சாத்தினதும் அபாய அலார்ம் அடிக்குது. வெளிய ஆண்ட்ரியாவும், ப்ரௌனும் ஒரு சின்ன சண்டையை ஆரம்பிக்க, சண்டைல ப்ரவுன் இறந்துடறான். ஸ்பீட் போட் திருடப் போன மரியாவும், ஸ்பைரோசும் ஒரு போட் கேப்டன் கூட சண்டை போடும்போது ஸ்பைரோசும் இறந்துடறான். மில்லர் தன் கிட்ட இருக்கற வெடி மருந்துகளை ரெண்டு பீரங்கிகள்லயும் வெச்சுடறாரு. கூடவே எக்ஸ்ட்ராவா லிஃப்டுக்கு கீழயும் வெச்சுட்டு, லிஃப்டோட சக்கரம் மேல ஏறும்போது வெடிக்கற மாதிரி செட் பண்ணிடறாரு.


இதுக்குள்ள ஜெர்மன் வீரர்கள் அந்த இரும்புக் கதவை வெல்டிங் பண்ணி கட் பண்ணி உள்ள வரதுக்குள்ள மல்லாரியும் மில்லரும் மலை மேல இருந்து கடலுக்குள்ள குதிச்சு திருடின ஸ்பீட் போட்ல ஏறி, ஆண்ட்ரியாவையும் காப்பாத்தி கூட்டிக்கிட்டு போயிடறாங்க. ஜெர்மன் வீரர்கள் எப்பிடியோ பீரங்கிகள்ல இருக்கற வெடி மருந்துகளை எடுத்துட்டாலும், அந்த லிஃப்ட்ல இறங்கும்போது மில்லர் செட் பண்ணின ட்ரிக்கர்னால லிஃப்டுக்கு கீழ வெச்ச வெடிமருந்துகள் வெடிச்சு அந்த பீரங்கிக் கோட்டையே சின்ன பின்னமாயிடுது. கரெக்டா ப்ரிட்டனோட கடல் படையும் கடலைக் கடந்து போய் கெரோஸ்ல மாட்டிக்கிடுருக்கற துருப்புகளை மீட்கப் போறாங்க.



ஒரிஜினல் நாவல்ல இருந்து நிறைய வேறுபட்டு இருந்தாலும் திரைகதைக்காக நல்லாவே செஞ்சுருக்காங்க. ஆண்டனி க்வின்னோட நடிப்பு டாப் க்ளாஸ். அதுவும் அந்த ஜெர்மன் ராணுவத்து கிட்ட மாட்டும்போது நடிச்சு தப்பிக்கும்போது… ஏ ஒன். டேவிட் நெவினோட டயலாக் டெலிவரி அவரோட 10 வருஷ தியேட்டர் அனுபவங்களோட ரிசல்ட். அற்புதம். அதே மாதிரி அந்த கடைசி 1/2 மணி நேரம் நம்மளை சீட் நுனிக்கே கொண்டு வந்துடும். இது மாதிரி படங்களைப் பாத்ததுக்கப்பறம் வேர்ல்ட் வார் படங்கள் எல்லாத்தையுமே பாத்துடணும்னு தோணுது.

A Beautiful Mind (2001)




நோபல் பரிசு பெற்ற ஜான் நேஷ் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து, சைல்வியா நாசர் எழுதிய ‘A Beautiful Mind' நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். 


கதாநாயகன் ஜான் நேஷ் பிரின்ஸ்டோன் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் அறிமுக வகுப்பில் படம் தொடங்குகிறது. ஜான் கணிதத்தில் மிகவும் ஆர்வமுள்ள மாணவன். ஏதாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்று முதல் நாள் கல்லூரியில் இருந்து கனவு காண தொடங்குகிறான். அவன் வகுப்பில் படிக்கும் ந்ஸோல், பெண்டர் அறிமுகமாகிறார்கள். லௌகீக ஆசையில் மனதில் இருந்தாலும் மற்ற நண்பர்கள் போல் அவனால் வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஒரே ஆதரவு அவன் அறையில் தங்கி இருக்கும் நண்பன் சார்லஸ் தான். 


கல்லூரியில் பல நாட்கள் வகுப்பு செல்லாமல் கணித ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறான். இதனால், அவன் திஸிஸ் பேப்பர் கொடுக்காமல் ஆராய்ச்சியில் இறங்க முடியாது என்று தலைமை ஆசிரியர் கூறுகிறார். ஜான் மனம் முடைந்து தன் அறைக்கு சென்றதும், அவன் நண்பன் சார்லஸ் ஆதரவாக அறிவுரை கூறுகிறான்.


ஒரு முறை தன் நண்பர்களுடன் பாரில் இருக்கும் பொது ஒரு அழகான பெண்ணை பார்த்து, தனது Governing dyanamics தத்துவத்திற்கு அடித்தளமான யோசனை கிடைக்கிறது. உடனே, அதற்காக வேலையில் இறங்குகிறான். அவன் தன் ஆராய்ச்சி குறிப்புகளை தலைமை ஆசிரியரிடம் கொடுத்ததும், அவனை பாராட்டுகிறார். அவனுக்கு MITயில் வேலை கொடுக்கிறார். அவனுக்கு உதவியாக சோல், பெண்டர் வைத்துக் கொள்ளவும் சம்மதிக்கிறார்.


ஐந்து வருடம் கலித்து, MITயில் வகுப்பு எடுக்கும் பொது ஒரு கணக்கு கேள்வி கொடுத்து தன் மாணவர்களிடம் விடை கண்டு பிடிக்க சொல்லுகிறார். அந்த கணக்கில் சந்தேகம் கேட்கிறாள் மாணவி அலிசா. அதன், ஜான்னும், அலிசாவும் காதலித்து இருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.


மீண்டும் பிரின்ஸ்டோன் வரும் போது தன் பழைய நண்பன் சார்லஸ்யை அவன் வளர்ப்பு மகள் மார்சியோடு பார்க்கிறான். அதன் பின், அமெரிக்க உளவுத்துறையில் பணி புரியும் வில்லியம் பார்சர் ஜான்னின் சந்தேக மொழியை (Encryption) உடைக்கும் திறமையை பார்த்து பிரம்பிக்கிறார். ஜான்னிடம் ரஷ்ய இதழ்களில் வரும் வார்த்தைகளை வைத்து அதில் இருக்கும் சந்தேக மொழியை உடைத்து, ஒரு ரிப்போர்ட் கொடுக்க சொல்லுகிறார்.


வில்லியம் தன் திறமையை நம்பியவருக்கு உதவியாக ரஷ்ய இதழ்களில் வரும் சதேக மொழியை உதைத்து, அதன் ரிப்போட்டை ஒரு தாபல் பெட்டியில் போடுகிறான். அதை பார்த்த மர்ம கும்பல் அவனை கொல்ல துறத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வருகிறான் ஜான். தன் கணவனின் நடவடிக்கையால் அலிசா மிகவும் மனமுடைகிறாள்.


ஒரு முறை, ஹார்வட் பல்கலைக்கழகத்தில் வகுப்பு எடுக்கும் போது, மனத்துவ மருத்துவர் ஒருவர் ஜான்னை வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறார். ஜான் அந்த மருத்துவரை ரஷ்ய உளவாளி என்று சந்தேகப்படுகிறான். அவரிடம் எந்த தகவலும் சொல்ல மறுக்கிறான். அதன் பின் தன் மனைவி அலிசா சொல்லி தான் அவனை இழுத்துவரப்பட்டது தெரிந்து கொள்கிறான்.


ஜானை பரிசோதித்த மருத்தவர், ஜான் hallucination வியாதியில் பாதிக்கப்பட்டதை சொல்லுகிறார். அதாவது, இல்லாத ஒன்றை இருப்பது போல் கற்பனை செய்துக் கொள்ளுவது. ஜானின் நண்பன் சார்லஸ், அவன் தத்து மகள் மார்சி, அமெரிக்க உளவாளி வில்லியம், அவனை துறத்திய மர்ம கும்பல் எல்லாம் அவன் கற்பனையில் உருவான கதாப்பாத்திரங்கள். யாரும் நிஜமில்லை. இதை ஜான்னால் எற்றுக் கொள்ளமுடியவில்லை.


ஒரு கட்டத்தில் தன் மகனை தண்ணீர் டப்பில் வைத்து விட்டு போக, அலிசா பார்த்து பதற்றம் அடைகிறாள். தன் குழந்தைக்காக கணவனை பிரிந்து செல்கிறாள். தன் கற்பனை உளவாளியான வில்லியம் அலிசாவை கொல்ல சொல்கிறான். சார்லஸ், அவளின் தத்து மகள் மார்சி இருவரும் அவனையே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். பல வருடங்கள் ஆகியும், மார்சி அப்படியே இருப்பதை உணர்ந்த ஜான் தனக்கு மன நோய் இருப்பதை ஏற்றுக்கொண்டு சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறான்.


பல வருடங்கள் கலித்து, தன் நண்பனின் உதவியுடன் மீண்டும் பிரின்ஸ்டோன் பலகலைக்கழகத்தில் வகுப்பு எடுக்கிறான். தன் கற்பனை கதாப்பாத்திரங்கள் தொல்லை கொடுக்கும் போது பல தியான பயிற்சி செய்து தவிற்கிறான். வயதான நிலையில் தன் இருக்கும் மனநோய்யை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள்கிறான். இறுதியில், அவன் கண்டு பிடித்த Game theoryகாக Economics பிரிவில் நோபல் பரிசு பெருகிறான் ஜான். விருது பெற்று மனைவியை முத்தம் கொடுக்கும் பொது சார்லஸ், மார்சி அவனையே பார்ப்பதை பார்க்கிறான்.


ஜானாக ரசில் கிரோ. வெற்றி படம் 'க்ளேடியட்டர்' பிறகு வந்த படம். க்ளேடியட்டரை போலவே இந்த படத்திற்கும் சிறந்த படம் என்ற ஆஸ்கர் விருது கிடத்தது. க்ளேடியட்டரில் ஆக்ரோஷமான கதாப்பாத்திரம் செய்தவர், இதில் மனநோய் பாதிக்கபட்டவராகவும், வயதான பிரோபஸராகவும் கச்சிதமாக பொருந்திருக்கிறார் ரசில். ஆரம்ப காட்சியில் மிகவும் இளமையாகவே தெரிகிறார். இந்த படத்திற்கு, ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அடுத்து அடுத்து ஆஸ்கர் விருது பெரும் கதாநாயகன் என்ற பெயரை தட்டி சென்றுயிருப்பார்.


அலிசாவாக ஜெனிப்பர் கொன்னெலி. ஜானின் காதலியாகவும், கணவனால் தன் குழந்தைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயப்படுவதிலும் ரசில் க்ரோவுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகை ஆஸ்கர் விருது இவருக்கு கிடைத்தது.


இயக்குநர் ரான் கவர்ட். இந்த படத்திற்காக சிறந்த இயக்குநர் ஆஸ்கர் விருதை (2002) பெற்றார். 1947 இல் இருந்து 1994 வரை காலக்கடத்தில் வாழும் கதாநாயகன் வாழ்க்கையை உணர்வு கலந்து மெதுவாக நகர்த்தி கொண்டு சென்று இருக்கிறார்.


படத்தின் இடையில் வரும் அமெரிக்க - ரஷ்ய பணி யுத்தத்தின் வசனங்களும், காட்சிகளும் கொஞ்சம் எதிர்ப்பு இருந்த போதும், 2002க்காக சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது 'A Beautiful Mind' படத்திற்கு கிடைத்தது.

Life is beautiful



லைப் இஸ் பியுட்டிபுல்(Life Is Beautiful):
கொடுமை நிறைந்த ஹிட்லரின் மரண மூகாமில் தன் மகனை காப்பாற்ற துடிக்கும் ஒரு யூத தந்தையின் கதை.

வாழ்க்கை அழகாக ரசித்து வாழும் யூத இளைஞன் குய்டூ. அவனால் யாரையும், எந்த சூழ்நிலையிலும் சிரிக்க வைக்க முடியும். அப்படிப்பட்டவன் ஒரு நாள் சைக்கிலில் செல்லும் போது இத்தாலி பெண்ணான டோராவை பார்த்ததும் காதல் கொள்கிறான். டோரா வேறு ஒருவனுடன் நிச்சயமாகியிருந்தாலும், குய்டூ வேடிக்கை செயல்களால் கவரப்படுகிறாள். ஒரு கட்டத்தில் அவளும் அவனை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறாள். அவர்களுக்கு 'ஜோஷூவா' என்ற மகன் பிறக்கிறான்.

சந்தோஷமாக ரசித்து வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் ஹிட்லரின் நாஜி படைகள் நுழைகிறது.பல யூதர்கள் நாஜி படையினர்களால் கைது செய்யப்படுகிறார்கள். அதில், குய்டூ, அவன் மகனும் அவர்களால் இழுத்து செல்லப்படுகிறார்கள். நாஜி படையினர் டோராவை அழைத்து செல்ல மறுக்கின்றனர். ஆனால், அவள் தன் கணவன், மகனை விட்டு பிரிய முடியாமல் யூத கைதியாக அவளும் செல்கிறாள்.

ஆண்கள் பிரிவு சிறையில் குய்டுவும், அவன் மகன் ஜோஷ்வாவும், பெண்கள் பிரிவு சிறையில் டோராவும் அடைத்து வைக்கப்படுகின்றனர். நாஜி படை கொடுமையின் நடுவில் தன் பயப்படாமல் இருக்க, " நடப்பது எல்லாம் ஒரு விளையாட்டு, நாம் அனைவரும் டாங்க் வண்டிக்காக போட்டி பொடுகிறோம்" என்று சொல்லி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறான். ரஷ்யப் படை முன்னேறிவரும் சமயத்தில், குய்டூ தன் மகனோடு தப்பி செல்ல முயற்சி செய்கிறான். மகனை ஒரு பெட்டியில் இருக்க சொல்லி விட்டு, அவன் நாஜி படையினரிடம் மாட்டி கொள்கிறான். மகனிடம், "பெட்டியில் இருந்து வெளியே வந்தால், விளையாட்டில் தோல்வியடைந்து விடுவோம்" என்று சொன்னதால், அந்த சிறுவன் தந்தை இழுத்து செல்வதை அரியாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

குய்டூவை சுட்டு கொள்ள, ரஷ்ய படை வரவால் டோரா தன் மகனோடு சேருகிறாள்.

குய்டூவாக நடித்தவர் ராபர்டோ பெனிங்னி. அவரே கதை, இயக்கம் செய்திருக்கிறார். கொடூரம் நிறைந்த இடத்தில் ஒருவனால் சிரிக்க வைக்க முடியும் என்பதை காட்டி நம் மனதை ஆள்கிறான். இந்த வித்தியாசமான சிந்தனைக்கே அவரை எவ்வளவு ஆண்டு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

முதல் பாதியில் அழகான தேவதையாகவும், இரண்டாவது கைதியுடையிலும் 'Nicoletta Braschi'. கணவன், மகன் பிரிந்த சோகத்தை கண்களே காட்டி நடித்திருக்கிறார்.

ஜோஷ்வா வரும் சிறுவன் அழகாகவும் இருக்கிறான். தந்தை சொல்லும் எல்லாம் பொய்யையும் அப்படியே நம்பும் போது நம் கண்கள் நம்மை அறியாமல் கலங்குகிறது.

கண்ணீர்த் துளிகள்;
துளி 1 :
'Dogs and Jewish are not allowed' என ஒரு கடையில் எழுதியிருக்கும். அதைப் பற்றி ஜோசுவாவும், கைடோவும் பேசும்பொழுது சிந்தியது. கவனிக்க, நம் நாட்டில் இன்னும் தீண்டாமை ஒழியவில்லை. எல்லா சாதியினர் வீட்டுக்குள், எல்லா சாதியினரும் செல்ல முடிவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கவும்.

துளி 2 :
தனியாக கடையில் அமர்ந்திருக்கும் ஜோசுவாவை அவன் பாட்டி பார்க்க வரும்பொழுது.

துளி 3 :
இப்படி அடைத்து வைத்திருப்பது, சாப்பாடு இல்லாமல் இருப்பது இதெல்லாம் எதற்கு என ஜோசுவா கேட்க 'இது ஒரு விளையாட்டு' என கைடோ சொல்லுமிடம். ஆம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு தானே என எனக்கு நினைவுக்கு வந்தது.

துளி 3 :
கைடோ தான் கொல்லப்படும் சமயம், பையனுக்கு தெரியாமல் இருக்க வீர நடை நடந்து போகும் பொழுது.

துளி 4 :
போட்டியில் வெற்றி பெற்றால் பையனுக்கு ஒரு 'Tank' கிடைக்கும் எனச் சொல்லியிருந்தான் கைடோ. இறுதியில் 'Tank' மேலமர்ந்து வரும் வீரர், ஜோசுவாவை தூக்கி வைத்துகொள்ள அவன் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ளும்பொழுது.


இத்தாலி மொழியில் வெளிவந்து பல உலக மொழிகளிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட படம்.

The Shawshank Redemption (1994)




1947 ஆம் ஆண்டில் ஆண்ட்ரிவ் "ஆண்டி" டுஃப்ரெஸ்னெ (டிம் ராபின்ஸ்) என அழைக்கப்படும் ஒரு பேங்கர் அவரது மனைவி மற்றும் காதலியை கொலை செய்ததாக பலமான சூழ்நிலை சாட்சியத்தை அடிப்படையாக வைத்து குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படுகிறார். ஷாவ்ஷாங்க் மாநிலத்தின் மெய்னில் உள்ள சீர்திருத்த சிறைச்சாலையில் இரு தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகள் பெறும்படி இவருக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த சிறைச்சாலையானது வார்டன் சாமுவேல் நார்டனால் (பாப் கண்டோன்) இயக்கப்படுகிறது. ஆண்டி அவருடன் ஆயுள்தண்டனையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அண்மையில் பரோல் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவரான எல்லிஸ் பாய்டு "ரெட்" ரெட்டிங் (மோர்கன் ஃப்ரீமேன்) என்பவருடன் விரைவில் நண்பராக மாறுகிறார். ரெட்டுக்கு வெளியில் இருந்து சிறையில் இருப்பவர்களுக்கு கள்ள வாணிகம் செய்பவர்களுடன் தொடர்புகள் இருப்பதை ஆண்டி கண்டறிகிறார். மேலும் ஆண்டி சுயமாக உருவாக்கிய செஸ் பெட்டி அமைப்புக்கு பயன்படுத்தும் பெருங்கல் பொழுதுபோக்கை விடாமல் செய்வதற்காக ஒரு பெருங்கல் சுத்தியலை ரெட்டிடம் ஆண்டி முதலில் கேட்கிறார். பிறகு அவரது சுவருக்காக ஒரு முழு அளவு ரிட்டா ஹேவொர்த்தின் சுவரோட்டியை ரெட்டியிடம் கேட்கிறார். நீண்ட காலங்களில் அந்தச் சுவரோட்டியில் மர்லின் மன்றோ மற்றும் ராக்குவெல் வெல்ச்சின் சுவரொட்டிகளை மாற்றி ஒட்டுகிறார்.

கைத்தொழில் பணியாளராக வேலை செய்துகொண்டிருக்கையில் வரவிருக்கும் பரம்பரை உடைமை வரிகளை செலுத்துவதைப் பற்றிய முறையீடை பாதுகாவலர்களின் தலைவர் பைரோன் ஹாட்லே (க்ளாசி ப்ரவுன்) பேசிக்கொண்டிருப்பதை ஆண்டி ஒட்டுக்கேட்கிறார். ஆண்டி தண்டனைக்குத் துணிந்து வரிகளை எவ்வாறு சட்டரீதியாக ஏமாற்றுவது என விவரிக்கிறார்; ஹேட்லி ஆண்டியின் அறிவுரையை ஏற்று அதற்கு பரிசாக அவரது நண்பர்களுக்கு இடைவேளை ஓய்வளித்து பியரை பரிசளிக்கிறார். ஆண்டியின் கணக்கர் துறை சாதுர்யம், விரைவில் ஷாவ்ஷாங்க்கின் பிற பாதுகாவலர்கள் மற்றும் அருகிலுள்ள சிறைச்சாலைகளில் சிறப்பாக அறியப்படுகிறது. மேலும் வயதான சிறைத்தோழர் ப்ரூக்ஸ் ஹாட்லெனுடன் (ஜேம்ஸ் ஒயிட்மோர்) ஒன்று சேர்ந்து சிறைச்சாலை நூலகத்தை பராமரிப்பதாக போலியாக கூறப்பட்டு அவர்களது நிதிநிறுவன விஷயங்களில் பண்புரிவதற்கு ஆண்டிக்கு இடமளிக்கப்படுகிறது. ஹேட்லி சிறைத்தோழர் போக்ஸை (மார்க் ரோல்ஸ்டோன்) மிருகத்தனமாக அடிக்கிறார். "த சிஸ்டரின்" தலைவர், அவரது குழுவினர் பாலியல் ரீதியாக ஆண்டிக்கு தொல்லையளிக்க முயற்சித்த பிறகு ஆண்டியை மருத்துவமனையில் அடைக்கின்றனர்; எஞ்சியிருக்கும் சிஸ்டர்கள் ஆண்டியைத் தனியே விடும் வரை போக்ஸ் முடக்கப்படுகிறார். லைப்ரரியை விரிவுபடுத்த உதவியாக ஆண்டி பாதுகாவலர்களுடன் அவரது நல்லெண்ணத்தைப் பயன்படுத்துகிறார்; த மேரேஜ் ஆப் பிகரோ இசை நாடகத்துடனான ஒரு நன்கொடை நூலகத்திற்கு வழங்கப்பட்ட போது அனைத்து சிறைத்தோழர்களும் அதை அறியும் படி பொது அறிவிப்பு அமைப்பில் ஆண்டி அறிவிக்கிறார். அந்த சிறிய இன்பத்தினால் அவர் பெறப்போகும் தனிமைச் சிறை தண்டையைப் பற்றி நன்றாக அறிந்திருந்த போதும் இவ்வாறு செய்கிறார்.


பொது வேலைகளுக்காக சிறைப் பணியாளர்களை பயன்படுத்தும் திட்டத்தை வார்டன் நோர்டோன் உருவாக்குகிறார். திறமையானப் பணியாளர்களை மலிவான விலைக்கு விற்று அதற்காக தன்னிச்சையாகத் தனிப்பட்ட முறையில் இலஞ்சம் பெறுகிறார். நோர்டோன் ஒரு தவறான அடையாளத்தின் கீழ் பணத்தை வெள்ளைப்பணமாக்க ஆண்டியை பயன்படுத்தினார். இதைப் பரிமாறிக்கொள்வதற்காக ஆண்டி தனிப்பட்ட சிறையை வைத்துக் கொள்வதற்கும் மற்றும் நூலகத்தைத் தொடர்ந்து பராமரிப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறார். ப்ரூக்ஸ் விரைவில் பரோலில் விடுவிக்கப்படுகிறார். ஆனால் கட்டுப்பாடில்லாத உலகத்தில் வெளிப்புறத்திற்கு ஏற்றவாறு அனுசரித்து நடக்க முடியாததால் தானாகவே தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்; ஆண்டி விரிவாக்கப்பட்ட நூலகத்தை ப்ரூக்ஸுற்கு அர்ப்பணம் செய்கிறார். 1965 ஆம் ஆண்டில் டாமி வில்லியம்ஸ் (கில் பெல்லோஸ்) என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டுகளில் ஷாவ்ஷாங்க்கினுள் சிறையிலிடப்படுகிறார். ஆண்டி மற்றும் ரெட்டின் நண்பர்கள் வட்டாரத்தில் டாமி சேர்ந்து கொள்கிறார். மேலும் ஆண்டி அவரது GED இல் நுழைவதற்கு டாமிக்கு உதவுகிறார். டாமி அவரது பழைய சிறைத்தோழரில் ஒருவரான எல்மோ ப்லாட்ச் (பில் போலந்தர்) என்பவர் ஆண்டி குற்றஞ்சாட்டப்பட்ட வகையிலேயே கொலைகளைச் செய்ததாக உண்மையை வெளிப்படுத்துகிறார். ஆண்டி விடுவிக்கப்பட்டால் நோர்டோனின் சட்ட விரோதமான செயல்பாடுகளை ஆண்டி வெளிப்படுத்தலாம் என நோர்டோன் அஞ்சுகிறார். அதனால் ஆண்டியை தனிச்சிறையில் அடைக்கிறார். மேலும் டாமி தப்பிக்க முயற்சித்ததாக ஹேட்லி அவரைக் கொல்கிறார். இறுதியாக ஆண்டி தனிச்சிறையில் இருந்து விடுவிக்கப்படும் போது ஆண்டி தொடர்ந்து நோர்டனுக்காக பணத்தை வெள்ளைப் பணமாக்கத் துணைபுரியாவிடில் நூலகத்தை எரித்து விடுவதாக அவரை அச்சுறுத்துகிறார்.


பிறகு விரைவில் ஆண்டி சிவிட்டாநெக்ஸொவில் வாழவேண்டுமென்ற அவரது கனவை ரெட்டிடம் வெளிப்படுத்துகிறார். அது ஒரு மெக்ஸிகன்-பசிபிக் கடற்கரை நகரம் எனவும் ரெட்டிடம் தெரிவிக்கிறார். மேலும் ரெட் எப்போது விடுவிக்கப்பட்டாலும் பக்ஸ்டோன் மெய்னின் அருகிலுள்ள ஒரு குறிப்பிட்ட பசும்புல் நிலத்தில் ஆண்டி விட்டுச்சென்ற ஏதேனும் ஒன்றை கண்டுபிடிக்க கண்டிப்பாக அங்கு சென்று பார்க்க வேண்டும் எனவும் கூறினார். அடுத்த நாள் வரிசை அழைப்பில் ஆண்டியின் சிறையறை காலியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோர்டோன் கோபத்தில் வெல்சின் சுவரொட்டியில் ஆண்டியின் கல்லில் ஒன்றை எரிகிறார்; அந்தக் கல் சுவரொட்டியின் வழியே கிழித்துச் சென்று அங்கு ஒரு சுரங்க வழி வெளிப்படுகிறது. ஆண்டி கடந்த இருபது ஆண்டுகளாக கல் சுத்தியலைப் பயன்படுத்தி தோண்டியதன் மூலம் ஷாவ்ஷாங்க்கில் இருந்து அவர் தப்பிக்க இடமேற்படுத்தியது தெரியவந்தது. இதனுடன் அவரது ஒரு ஜோடி பொது ஆடைகள், அவரது செஸ் பெட்டி மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை நோர்டோனுக்காக அவர் வைத்துச் சென்றிருந்தார். முன்னிறவில் அவர்களை ஏமாற்றுவதற்காக அந்தப் பொருட்களை விட்டுச் சென்றிருந்தார். வங்கியில் இருந்து நோர்டோனின் அனைத்து பணத்தையும் எடுப்பதற்கு அவரது தவறான அடையாளத்தை ஆண்டி பயன்படுத்திக் கொண்டார். அதே சமயத்தில் அதற்கான ஆதாரத்தை உள்ளூர் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். கதை நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்த நாளில் காவல் துறை சிறையை முற்றுகையிட்டது; ஹேட்லி கைது செய்யப்படுகையில் நோர்டோன் தற்கொலை செய்து கொண்டார்.


ரெட் அவரது 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனையை முடித்த பிறகு இறுதியில் வெற்றிகரமாக அவருக்கு பரோல் கிடைக்கிறது. ப்ரூக்ஸைப் போன்று அவரும் தானாகவே ஒரு மளிகைக் கடையில் அதே பொட்டலம் கட்டும் வேலையைச் செய்கிறார். மேலும் ப்ரூக்ஸ் தற்கொலை செய்துகொண்ட அதே குடியிருப்பில் வாழ்கிறார். ஆண்டியின் ஆலோசனையை ஏற்று பக்ஸ்டோனுக்கு சென்று பார்க்க ரெட் முடிவெடுக்கிறார். ஆண்டி குறிப்பிட்டிருந்த அந்த பசும்புல் நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை அவர் கண்டுபிடிக்கிறார். அதனுடன் ஆண்டியின் சிவிட்டாநெக்ஸொ, மெக்ஸிகோவைப் பற்றி நினைவுபடுத்தும் ஒரு குறிப்பும் அதில் இருந்தது. ரெட் அவரது பரோலை மீறி மெக்ஸிகோவிற்குப் பயணிக்கிறார்; கடற்கரை பிரதேசத்தில் அவர் ஆண்டியைக் காணுகிறார். மேலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைகின்றனர்.

Hotel Rwanda (2004)








ருவாண்டாவில் நடந்த கொடூரங்களைப் பற்றி விவரிக்கிறது "hotel rwanda". 1994-இல் நடந்த genocide பற்றியும், அதன் காரணகர்த்தர்களான Belgium-தை பற்றியும், தெரிந்திருந்தும் கையை கட்டிக்கொண்டு நின்று நடக்கும் கொடுமையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த உலகத்தையும் கன்னத்தில் அறையும் படம். இதன் ஹீரோ பால், ஒரு நட்சத்திர ஹோட்டலின் மானேஜர். அவரின் மனைவி தாதியானா. இந்த தனி மனிதரின் கதையானாலும் ருவாண்டாவில் நடந்தவைப்பற்றியும் world community-இன் reaction-ஐயும் கூறுவதில் இப்படம் நம்மில் விழிப்புணர்வு ஏற்படுத்துமென்பதில் சந்தேகமேயில்லை. இப்படத்தை இதுவரை என்னை மாதிரி பார்க்காதோர், பாருங்கள். கதையில் genocide மட்டுமே. மெஜாரிட்டியான ஹுட்டுஸ் மைனாரிட்டிகளான டுட்ஸிஸ் எனப்படும் இனத்திற்கு எதிராக இனப்படுகொலை நடத்துகின்றனர். இந்த நிலையில் ஹுட்டுவான பால் டுட்ஸிகளுக்கு எப்படி மறுவாழ்வளிக்கிறார் என்பதே கரு. corruption, intimidation, blackmail, chivalry - இப்படி எல்லா வழிகளிலும் படாத பாடு படுகின்றார்.

இதில் paul உலகின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நம்மில் பலருக்கும் இருக்குமென்பதில் எனக்கு ஐயமில்லை. நம் நாட்டில் இது போன்று, God Forbid, நடந்தால் உலகம் என்ன செய்யும் என்று நான் எதிர்ப்பார்ப்பேனோ, அதையே தான் பாலும் எதிர்ப்பார்க்கிறார். ஆனால், UN என்ன செய்கிறது? சிறப்பு படைகளை அனுப்பி வெளிநாட்டுப் பயணிகளை மட்டும் மீட்டுக் கொண்டுவிட்டு ஆப்ரிக்கர்களுக்கு middle finger காட்டி விட்டு செல்கின்றனர். நீங்கள் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை என்று சொல்லிவிட்டு செல்கின்றது. பெயரளவிற்கு ஒரு presence-ஐ மட்டும் வைத்து விட்டு, எல்லா UN பணியாளர்களூம் ஒடுகின்றனர்.

சில குறிப்பிட வேண்டிய காட்சிகள். ஐ. நா தளபதி paul-இடம் சொல்கிறார். நீங்கள் வெறும் ஆப்ரிக்கர்கள் (Blacks). ஆப்ரிக்க-அமெரிக்கர்களென்றாலுங்கூட இவ்வுலகம் கண்டுகொள்ளும். ஆனால் நீங்கள் வெறும் ஆப்ரிக்கர்கள்.

இன்னொன்று. ஒரு வெள்ளைக்கார TV cameraman இந்த இனப்படுகொலையை வீடியோ பதிவு செய்வதை அறிந்து, பால் இந்த பதிவைப் பார்த்தாவது உலகம் உதவிக்கு வரும் என்பார். அதற்கு அந்த காமிராமேன் கூறும் பதில் நம்மையெல்லாம் கூனிக்குறுகச் செய்துவிடும். "u Know what will they do when they see this? They will say, "Oh My God, Thats Horrible!" and then go back to their dinner". வாழ்நாளில் மறக்கமுடியாத வசனம் இது.

இவற்றிற்கெல்லாம் மேல் இந்த பால் எப்படி அந்த ஹோட்டலில் வாழும் 1200-க்கும் மேற்ப்பட்ட டுட்ஸி-களை காப்பாற்றுகிறார் என்பதே கதை. கிட்டத்தட்ட 14 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு WWII வை விட பெரிய இனப்படுகொலை, இது ஆப்ரிக்க கணடத்தில் தானே நிகழ்ந்தது என்ற ஒரே காரணத்திற்காக உலகம் முழுவதும் அலட்சியம் செய்யப்பட்ட அவலத்தை வெளிக்கொணர்கிறது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் .

The Great Escape (1963)



இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட ஒரு நாவலை கொண்டு எடுக்கப்பட்டது. எழுதியவர் சம்பவம் நடந்த Stalag Luft III யில் கைதியாக இருந்தவர் தான். அதனால் தான் என்னவோ இந்த படம் முழுக்க அப்படியொரு பரபரப்பு. நாவலை படமாக்குவதற்கு நிறைய பேர் கேட்டார்கள், அப்பொழுது இரண்டாம் போரின் பொழுது பல செய்தி குறும்படங்களை எடுத்து அனுபவபட்டவரான John Sturges மிகவும் கேட்டதின் பெயரில், அவருக்கு இந்த கதையை படமாக்க அனுமதி தந்தார்.



தப்பித்து போகும் கைதிகளை பிடிபதற்கு நிறைய செலவு ஆகுவதால், அவர்கள் தப்பித்து போக முடியாதளவுக்கு ஒரு சிறை வடிவமைத்து : அதில் பிரச்சனை குறிய அணைத்து கைதிகளையும் போடுகிறது ஜெர்மன் ராணுவம். கைதிகள் அனைவரும் சிறு சிறு முயற்சிகள் எடுத்து தோற்று போகிறார்கள்.



சிறைக்கு மிக பக்கத்தில் காடு, இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சிறை அறையிலிருந்து அந்த காடு வரைக்கும் ஒரு சுரங்கபாதை ஒன்றை வெட்ட வேண்டும். ஆனால் அத்தனை சிறப்பாக ஒருங்கிணைக்க ஒரு தலைவர் இல்லை. இந்த மாதிரி சுரங்கபதை அமைப்பதில் வல்லவரான ஒருவரை அங்கிருக்கும் எல்லோரும் எதிர் நோக்கி இருக்கிறார்கள் : BIG X .

அவரும் வருகிறார். ஆனால் அவரை சிறையிலடைக்கும் முன், மீண்டுமொருமுறை அவர் தப்பிக்க முயற்சி செய்தால், சுட படுவர் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால் அவருக்கோ இப்படி சிறையில் சும்மா இருப்பதை விட, போரில் நாட்டுகாக போராட ஆசை.

அன்று இரவே, ரகசிய கூட்டத்தில் யார் யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க படுகிறது. அப்படி எடுக்க பட்ட முடிவின் படி, மூன்று சுரங்கபாதை வெட்ட படுகிறது. சிறை அதிகரிகள் ஒன்றை கண்டுபிடித்தால் கூட மற்ற இரண்டில் தப்பிக்க முடியுமே என்ற முன் யோசனையில் தான். அப்படி அவர்கள் வெட்டும் பொழுது, ஒரு பிரச்சனை வருகிறது. குழியில் இருந்து வரும் மண்ணை என்ன செய்வது என்று ???

எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு சுரங்கபாதை சிறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க படுகிறது. அதனால் மீதி இருக்கும் இரண்டு சுரங்கத்தில் ஒன்றில் மட்டும் கவனத்தை செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தி அவர்கள் சுரங்கபாதையை வெட்டி அந்த பக்கம் வெளியேறும் போது தான் அவர்களுக்கு தெரிகிறது, திட்டமிட்ட படி அந்த பாதை காட்டின் உள்ள போய் முடியாமல் ....முள்வேலி தடுப்புக்கு பக்கத்திலும் : காட்டுக்கு 20 அடி முன் தள்ளியும் போய் முடிகிறது. சிறை காவலாளிகள் பார்வை.... வானத்தில் குண்டு போடும் விமானங்கள் .... ரொம்ப இக்கட்டான நிலை ...தப்பிதர்களா ???



"30 அடி நேர் கீழ தோண்டிட்டு...பின்ன காட்டை நோக்கி தோண்டுங்க. அப்ப தான் வெளில இருக்கிற ஆளுங்களுக்கு சத்தம் கேட்காது"
" கேப்டன் ...."
"புரிது ...நீ என்ன கேட்க போறன்னு ...இந்த வாட்டி அவங்க முகத்துல கரிய புசனும் ..இருபது முப்பது பேர் இல்ல ..ஒரு 250 பேர்"

சுரங்கபாதை வெட்டும் சத்தம் அதிகாரிகளுக்கு தெரிய கூடாதென்று அவர்கள் எழுப்பும் பிற சத்தங்களும், கிளைமாக்ஸ்யில் தப்பித்து போனவர்களை கண்டுபிடித்து விடுவார்களோ என்று பரபரப்பு தனிமையில் அமர்ந்து பார்த்தால் நம்மையும் தொற்றிகொள்ளும்.

பிறகு அந்த அமெரிக்கா கைதி பந்தை சுவரில் அடித்து காவலாளிகளின் நடையை கணக்கிடும் முறை நல்ல தானிருக்கு. ஆனால் அது வேற ஏதோ நாவலில் வருகிறது என்று கேள்விபட்டேன்.

எனக்கு பொதுவாக போர் சமந்தப்பட்ட படங்கலேன்றாலே ரொம்ப பிடிக்கும். அதுவும் முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர் ன்னாலே நிறைய உண்மை சம்பவங்கள் சொல்லபடாம இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி Dying Soldier (பெயர் சரியாய் ஞாபகமில்லை) படிச்சேன் ....அப்படியே உருகி போயிட்டேன். அதுவும் இதே மாதிரி போரில் இருந்து தப்பித்து வரும் இரண்டு வீரர்களை பற்றியது. அவர்களின் நாடு தோற்று போயிருக்கும்...அந்த வலி வேதனை எல்லாம் வார்த்தைகளில் ரொம்ப இயல்பபாக சொல்லிருப்பாங்க.


Related Posts Plugin for WordPress, Blogger...